பிரபா என நாம் அழைக்கும் பிரபாரூபன்,
எங்களின் அன்பிற்கினிய நண்பன்.
சிறு புன்னகையுடன் எல்லோரோடும் கனிவாய் பழகுபவன்.
எல்லா விடயங்களிலும் ஒரு ஒழுக்கம் நிறைந்த பண்பாளன்.
திரைமறைவில் பல நற்கருமங்கள் செய்வதில் அவனுக்கு நிகர் அவனே.
ஆவணித் திங்களில் அவதரித்தவனை
அரை ஆயுளில் காலன்
கவர்ந்து சென்று
கண்ணீர் கடலில் ஆழ்த்தி விட்டான்.
பெற்ற தாய் கலங்கி கதற,
உற்ற துணை உறைந்து, உடைந்து நிற்க, பாசக்குழந்தைகள் பரிதவிக்க, அகிலமெங்கும் வாழும் ஆருயிர் நண்பரெல்லாம் நிலைகுலைந்தே போயினரே.
அவன் இனி இல்லை என்றான பின்னும்,
அடி மனம் மட்டும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.
கால் நூற்றாண்டு கடந்த இனிய நட்பொன்று
இனி நம்மோடு உரையாட வரப்போவதில்லை
என்று எண்ண உள்ளம் மறுக்கிறது.
ஒரு கணப் பொழுதில்
எங்கள் நல் நண்பனை
காலனவன் இரக்கமின்றி கவர்ந்து சென்றுவிட்டான்.
பிரபா நீ எங்களை விட்டு சென்றாலும்
உன் புன்னகை பூத்த முகம் எங்கள் உள்ளங்களிலிருந்து என்றும் அழியாதடா.
நீ செய்த நற் செயல்களெல்லாம்
உன் நினைவாய் எங்களோடு வருமடா.
அரை நூற்றாண்டு நீ வாழ்ந்தாலும்,
அகிலம் உள்ள மட்டும் உன் அழியாப் புகழ் வாழுமடா.
விடை தருகிறோம்
எங்கள் ஆருயிர் நணபனே.
அழியாப் புகழுடன் உன் ஆன்மா
ஆண்டவன் பாதம் அமைதி பெறட்டும்.
ஈடு செய்யா முடியாத உன் இழப்பால் வாடும்
E93 பேராதனை நண்பர்கள்